பிளஸ் 1 மறுகூட்டலுக்கு கூடுதல் அவகாசம்?

பிளஸ் 1 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் தரப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிளஸ் 1 தேர்வு, மார்ச்சில் நடந்தது; 8.61 லட்சம்
பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின. இதில், 75 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள், மொத்தமுள்ள, 600 மதிப்பெண்களுக்கு, 400க்கும் குறைவாகவே பெற்றனர்.


அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, ஜூன் 19ல், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் விபரங்கள் தரப்பட்டன. பலரது விடைத்தாளில், மதிப்பெண் கூட்டலில், பிழை இருப்பது தெரிய வந்தது.குறிப்பாக, 14ம் எண் மையத்தில், திருத்தப்பட்ட ஒரு விடைத்தாளில், சரியான விடைகளுக்கு, 38 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், கூட்டலின் போது, வெறும் நான்கு மதிப்பெண் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.அதேபோல், 49ம் எண் மையத்தில், திருத்தப்பட்ட ஒரு விடைத்தாளில், ஒரு மாணவர், 61 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், மொத்த மதிப்பெண்ணில், வெறும், 25 மதிப்பெண் மட்டுமே சேர்த்துள்ளனர். இதேபோல, வேறு சில மாணவர்களுக்கும், சில வினாக்களுக்கு குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஆசிரியர்களிடம் கொடுத்து, மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.அதற்கு, காலதாமதம் ஆவதால், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி தேதி என, அறிவித்துள்ளதை, ஒரு நாள் நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்