பிளஸ் 1 படிப்பில், களையிழந்தது கணிதம் வணிகவியலுக்கு மவுசு

பிளஸ் 1 படிப்பில், கணிதம், அறிவியல் பிரிவில், மாணவர்கள் சேர்க்கை கடும் சரிவை சந்தித்துள்ளது; ஆனால், வணிகவியலில் சேர்க்கை அதிகரித்து உள்ளது.இந்த ஆண்டு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கை, கடுமையாக சரிந்துள்ளது. 


ஒவ்வொரு பள்ளியிலும், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், 50 சதவீத இடங்கள் வரை, காலியாக உள்ளன; சில பள்ளிகளில், 25 சதவீத இடங்களே நிரம்பிஉள்ளன.இதற்கு நேர்மாறாக, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக கணிதம் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 

பெரும்பாலான பள்ளிகளில், இப்பிரிவுகளில் இடங்கள் காலியின்றி, பலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். வணிகவியலில் சேர விண்ணப்பித்த சிலர், தற்காலிகமாக, கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, வணிகவியலில் இடம் காலியானால், பாடப்பிரிவை மாற்றுவதாக, ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அறிவியல் பாடப்பிரிவை படித்தால், மருத்துவம் படிக்கச் செல்லலாம். ஆனால், 'நீட்' தேர்வு கட்டாயமானதால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மட்டுமின்றி, சித்த மருத்துவ படிப்புகளிலும், சேர முடியாத நிலை உள்ளது. கணித பாடப்பிரிவில், இன்ஜினியரிங் சேரலாம் என்றாலும், கணித தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது சவாலாகி உள்ளது.எனவே, கணிதம் மற்றும் அறிவியலில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண் பெறுவதை விட, வணிகவியல் படித்து, சி.ஏ., படிப்பில் சேரலாம். பி.காம்., போன்ற வணிக படிப்பும் படிக்கலாம். அதனால், வணிகவியல் படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.