மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் அரசு பல்மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா பல்மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 170 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,020 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் வழங்கும் பணி அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவ கல்லூரியிலும் நேற்று தொடங்கியது.

விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வழங்கி தொடங்கிவைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வர் டாக்டர் வசந்தாமணியும், சென்னை மருத்துவக்கல்லூரியில் முதல்வர் டாக்டர் ஜெயந்தியும், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் முதல்வர் டாக்டர் நாராயணபாபுவும் தொடங்கிவைத்தனர்.

ஏராளமான மாணவ-மாணவிகளும் பெற்றோர்களும் விண்ணப்பம் வாங்க வந்திருந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பம் பெறுவதை விட டி.டி. எடுக்க கூட்டம் அலை மோதியது. பின்னர் ஒவ்வொருவரும் விண்ணப்பம் பெற்றுச்சென்றனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த பிரிவினர் அல்லாத மாணவ-மாணவிகளுக்கு கட்டணம் ரூ.500 ஆகும். தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000 ஆகும். இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்க கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.

முதல் நாளான நேற்று மட்டும் 11 ஆயிரத்து 967 விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் வாங்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.