அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், 18ல் திறப்பு

தமிழகம் முழுவதும், அனைத்து அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், வரும், 18ல், திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில், 91 அரசு கல்லுாரிகள், 139 அரசு உதவி மற்றும், 516 சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரி கள் செயல்படுகின்றன. அதே போல், 41 பல்கலை உறுப்பு கல்லுாரிகளும் இயங்குகின்றன. இவற்றில், தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கைப்படி, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 


அனைத்து மாணவர்களுக்கும், வரும், 18ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படும் என, கல்லுாரி கல்வி பொறுப்பு இயக்குனர், சாந்தி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கல்லுாரி கல்வி இயக்குனராக இருந்த, மஞ்சுளா, மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில், இணை இயக்குனராக உள்ள, சாந்திக்கு, இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அனைத்து கல்லுாரிகளுக்கும், கல்லுாரி திறப்பு தேதி குறித்து, சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.கல்லுாரி திறக்கும் நாளில், புதிய மாணவர்களை, பழைய மாணவர்கள் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். புதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். ராகிங் போன்ற, அத்துமீறல்கள் இருக்க கூடாது என, கல்லுாரி முதல்வர்கள் வழியே, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன.