நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் சிந்தனை திறன் கேள்விகள்

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்துவது குறித்து, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 'புளூ பிரின்ட்' என்ற, வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில் பாடத்தின் உட்பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகளுக்கு சிந்தித்து விடையளிக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்களில்,
20 சதவீதமும்; சிறு, குறு, நெடுவினா போன்றவற்றிலும், சிந்தித்து விடையளிக்கும் கேள்விகள் மற்றும், புதிய கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 2 வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் ஏற்கனவே கடைபிடிக்கப்படும், புளூ பிரின்ட் அடிப்படையில் வினாத்தாள் அமையும். 2017 டிசம்பரில் நடந்த அரையாண்டு தேர்வு மற்றும், 2018 பொது தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் அடிப்படையில் வருங்காலத்தில் வினாக்கள் உருவாக்கப்படும்.

எனவே, ஏற்கனவே நடந்த தேர்வுகளில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால், முழு மதிப்பெண் பெற முடியாது என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவுபடுத்த வேண்டும். பாடத்தின் உட்கருத்தை புரிந்து படிக்கும்படி, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.