'தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளியுங்கள்' - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 'தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து, அரவணைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை:பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகிறது. அடுத்து, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளன. மூன்று தேர்வுகளையும், 27.72 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். மதிப்பெண் குறைவு; தேர்வில் தோல்வி போன்ற காரணத்தால், சில மாணவர்கள் தவறான முடிவுகள் மேற்கொள்வதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளது.தேர்வு முடிவுகள் வெளியானதும், மனச் சோர்வடையும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மனச் சோர்விலிருந்து விடுபடவும், தன்னம்பிக்கை அளிக்கவும், உரிய ஆலோசனைகள் வழங்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி இயக்ககத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, தகவல் மையம் இயங்கி வருகிறது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், இம்மையத்தை, 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம்.இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற, மனநல வல்லுனர்கள், மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில், பெற்றோர் கவனத்துடன் இருந்து, மனச் சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து, அரவணைக்க வேண்டும்.தமிழகத்தை பொறுத்தவரை, அனைத்து மாணவர்களுக்கும், நல்ல எதிர்காலத்தை, அரசு உருவாக்கி வருகிறது.எனவே, பெற்றோரும், மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும், ஊடகத்துறை நண்பர்களும் சேர்ந்து, தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் அனைவரையும், உற்சாகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.