தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!

சென்னை: ''தமிழகத்தில், 'நிபா' வைரஸ் பாதிப்பில்லை,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி தெரிவித்தார்.


திருச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட பெரியசாமி என்பவருக்கு, 'நிபா' வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், 'பெரியசாமிக்கு, நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; சாதாரண காய்ச்சல் தான்' என, திருச்சி மருத்துவமனை, டீன் அனிதா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது: கேரளாவுக்கு, சாலை பணிக்கு சென்றவர்களில் ஒருவருக்கும், சபரிமலை சென்று திரும்பியவர்களில் ஒருவருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது. கேரளாவில், நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அவர்களும், அந்த வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, சந்தேகித்து பீதியடைந்துள்ளனர். கேரளா சென்று திரும்பியோரில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில், யாருக்கும், நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தமிழகத்தில், நிபா வைரஸ் பாதிக்காத வகையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.