துாத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ - ஜியோ' இன்று ஆர்ப்பாட்டம்

துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன் கூறியதாவது: 


துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அறவழி போராட்டம் நடத்தி வந்தனர். நுாறு நாட்கள் ஆகியும் அரசு கண்டு கொள்ளாததால் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார், தமிழக அரசை கண்டிக்கிறோம்.போராடியவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாமல், அதிகாரத்தால் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு இதுபோன்று செயல்படுகிறது. இதே போன்ற நடவடிக்கையை ஜல்லிக்கட்டு, ஜாக்டோ - ஜியோ போராட்டங்களின் போதும் எடுத்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் முதற்கட்டமாக இன்று (மே 24) மாலை 5:00 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.