தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கேரளாவிலேயே அது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் மலப்புரம், கண்ணணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதலால், பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அருகில் உள்ள தமிழகத்திலும் நோய் பரவாமல் இருக்கு தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகளில் தேனி மாவட்ட சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக லோயர்கேம்ப், கம்பம் மெட்டு மற்றும் போடிமெட்டு மலை சாலைகளில் மழை பெய்கிறது.
மலைச்சாலைகளில் நிபா வைரஸ் சோதனை செய்யும் மருத்துவக் குழுவினர், தொடர் சாரல் மழையால் பரிசோதனை செய்ய முடியாமல், வெளியேறுகின்றனர். அந்த நேரங்களில் கேரளத்திலிருந்து இருந்து வரும் வாகனங்கள் தமிழகத்துக்குள் பரிசோதிக்கப்படாமல் வருகின்றன.
இதன் காரணமாக நிபா வைரஸ் தேனி மாவட்டம் வழியாக தமிழகத்துக்குள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவக் குழுவினருக்கு, லோயர்கேம்ப், கம்பம்மெட்டு ஆகிய இடங்களில், நிரந்தர முகாம்களை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.14 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் சாதாரண காய்ச்சலே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கேரளாவிலேயே அது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.