வினாத்தாள் குளறுபடி: மதுரை மையத்தில் நீட் தேர்வு தொடங்குவதில் சிக்கல்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இந்தத் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் 2,255 மையங்களில் மற்றும் தமிழகத்தில் 170 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தாஸ், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், மதுரை நரிமேடு பகுதியில் அமைந்துள்ள நீட் தேர்வு மையத்தில் தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழில் வினாத்தாள் தராமல் ஆங்கிலம், இந்தியில் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மாணவர்கள் முறையிட்டதால் வினாத்தாள் மாற்றி தரப்பட்டது. இந்த வினாத்தாள் குளறுபடியால் நீட் தேர்வு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் போதிய வினாத்தாள் இல்லாததால் 87 மாணவர்களுக்கு நீட் தேர்வு இன்னும் தொடங்கவில்லை.
அதுபோல சேலம் மெய்யனூரில் உள்ள மையத்தில் வினாத்தாள் வர தாமதமானதால் நீட் தேர்வு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்றது.