தலைமை செயலகம் நோக்கி பேரணி: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தடுத்து நிறுத்தம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, தலைமை செயலகம் செல்லும் சாலையில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது.
முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரணியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த மேலும் சிலரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதனால் தலைமை செயலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது.

கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 135 பேரையும், மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பகுதியில் சென்னைக்கு போராட்டம் நடத்த கிளம்பிய ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.