அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விடுத்தது ஆணவ அறிக்கை: மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் நடக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அந்த அமைப்பினர் அறிவித்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்களை உள்ளூரிலேயே போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் கைது செய்யப்பட்டு வருகின்றனர். திங்கள்கிழமை மாலை வரை கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 வாகனங்களில் வந்த இந்த அமைப்பின் நிர்வாகிகள் 82 பேர், உறுப்பினர்கள் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கைது நடவடிக்கைகள் அரங்கேறின. மேலும், புறவழிச்சாலைகளில் செல்லும் வாகனங்கள், பேருந்துகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரும், சுங்கச்சாவடிகளில் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சென்னை சேப்பாக்கம், வாலஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கோட்டை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை கைது செய்து அருகருகே உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்தார்கள். இதில் மோசமாக பாதிக்கப்பட்ட பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அவர்களிடம் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தில் அரசு இருப்பதாக நினைக்கவில்லை. அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை. ஆணவத்தின் உச்சாணி கொம்பில் இருந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார்.
மேலும் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது. போராட்டம் அறிவித்த உடனே அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.