இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்

கத்திரி வெயில் திங்கள்கிழமையுடன் (மே 28) நிறைவடைகிறது.
கத்திரி வெயில் நிறைவு பெறும் நிலையில், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்
தென்மேற்குப் பருவமழை தொடங்கினால் வெயிலின் தாக்கம் தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை 24 நாள்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வடகிழக்குப் பருவமழை நிறைவடைந்த பின்னர் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.
கோடை வெயில்: கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வந்தது. கோடை மழையினால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது.
இன்று நிறைவு: இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான கத்திரி வெயில் காலம் மே 28-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: கத்திரி வெயிலுக்கும் வானிலை ஆய்வு மையத்துக்கும் தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழையானது தமிழகத்தை நெருங்கி வரும் சமயம் ஈரப்பதமான காற்று வீசக்கூடும். அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை தொடங்கும்போது வெப்பத்தின் தாக்கம் மேலும் குறையும்.
தமிழகத்தில் தற்போது தெற்கு மற்றும் மேற்கு திசையில் காற்று வீசி வருகிறது. பருவமழை தொடங்கிய பின்பு காற்றின் திசை மாறக் கூடிய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
2 இடங்களில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி திருத்தணியில் 103, வேலூரில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டை, மதுரையில் 97 டிகிரி, திருச்சியில் 96 டிகிரி, புதுச்சேரியில் 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.