பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாக (டி.டி.) செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்
இந்தாண்டு பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு
ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 3-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரசன், வழக்கறிஞர் பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதன்படி கடந்த 3-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரசன், வழக்கறிஞர் பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின்
விசாரணை நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர்
அடங்கிய அமர்வில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த வழக்கின்
விசாரணையின்போது, “ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது வங்கி கணக்கு
இல்லாத கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?” என நீதிபதிகள்
கேள்வி எழுப்பினர். மேலும், “கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை
வரைவோலையாகப் பெறலாமா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க
வேண்டும்” என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
கேள்விகளுக்கு
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்
நேற்று முன்தினம் பதிலளிக்கையில், “வரைவோலையாக பெறுவதில் தொழில்நுட்ப
சிக்கல்கள் உள்ளன. எனவே வரைவோலையாக பெற முடியாது” என தெரிவித்தார்.
அவரது பதிலால்
அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “பொறியியல் படிப்புக்கு வி்ண்ணப்பிக்கும்
நிலையிலேயே மாணவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்பாடுகளைக் களைய அண்ணா
பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி விசாரணையைத்
தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம்
தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர் ஆஜராகி, “கடந்த 2016
முதல் தற்போது வரை விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தும் முறை
அமலில் உள்ளது. இந்தாண்டு இதுவரை 55 ஆயிரம் பேர் ஆன்லைனில்
விண்ணப்பித்துள்ளனர். கட்டணத்தை வரைவோலையாக பெற முடியாது” என்றார்.
அப்போது
குறுக்கிட்ட நீதிபதிகள், “அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும், மீண்டும் ஒரே
பதிலையே சொல்லி இருக்கிறது. இணையதள வசதி, வங்கி கணக்கு, டெபிட் கார்டு,
கிரெடிட் கார்டு போன்ற வசதிகள் இல்லாத மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஆன்லைன்
முறையால் எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்ற நிலை ஒரு
மாணவருக்குக்கூட ஏற்பட்டுவிடக்கூடாது. இதை மனதில் வைத்து அண்ணா
பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை
மாணவர்களிடம் வரைவோலையாகப் பெற்றுக்கொண்டு அதை அண்ணா பல்கலைக்கழகம் தமது
நடப்பு கணக்கின் நெட்-பேங்கிங் வசதி மூலமாக பரிமாற்றம் செய்யலாமே” என
அறிவுறுத்தினர்.
மேலும், இது
தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தை அறிந்து தெரிவிக்க அரசு கூடுதல்
தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.
தொழில்நுட்ப ஏற்பாடுகள்
சற்று
நேரத்துக்குப் பிறகு “விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக பெற்றுக் கொள்ள
பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது” என வழக்கறிஞர் மணிசங்கர்
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“இதற்கு
ஏற்றாற்போல மென்பொருளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அதற்கு ஒரு வார காலம்
அவகாசம் தேவைப்படும். வரும் மே 18-ம் தேதிக்குள் அதற்கான தொழில்நுட்ப
ஏற்பாடுகளை செய்து விடுகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, “இது
தொடர்பான தமது நிலைபாட்டை அண்ணா பல்கலைக்கழகம் பிரமாணப் பத்திரமாக தாக்கல்
செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.