ஊதிய உயர்வை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மே 30, 31-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவிப்பு

ஊதிய உயர்வு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி வரும் 30, 31-ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2017 நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, கடந்த மார்ச் 15-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், வங்கித் துறையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் காரணமாக இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.

2 சதவீதம் ஊதிய உயர்வு

இதையடுத்து, மார்ச் 21-ம் தேதி நாடாளுமன்றம் முன்பாக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மத்திய நிதியமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம், கடந்த 5-ம் தேதி மும்பையில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 2 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்தது.
கடைசியாக நடந்த 10-வது இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தையின்போது 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.

வேண்டுமென்றே கால தாமதம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்பாக ஊதிய உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காணும்படி இந்திய வங்கிகள் சங்கத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், இந்திய வங்கிகள் சங்கம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததோடு, இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக கருதவில்லை.
எனவே, ஊதிய உயர்வு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வலியுறுத்தி வரும் மே 30 மற்றும் 31-ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த வேலை நிறுத்தம் வரும் மே 30-ம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கி ஜுன் 1-ம் தேதி காலை 6 மணி வரை 48 மணி நேரம் நடைபெறும்.
இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.