2011க்குப் பிறகு முதல் முறையாக முன்கூட்டியே தொடங்கியது பருவ மழை

மும்பை: தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவைத் தொடர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல், மாலத்தீவுகள், லட்சத்தீவு, கேரளாவின் பெரும்பகுதி, தமிழகத்தின் சில பகுதி, வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு மே 29ம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இது வழக்கமான கால கட்டத்தை விட 3 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புவியியல் அமைப்பில் தொடர்ச்சியான மழை அளவு, காற்றின் வேகம், மேகக் கூட்டங்கள், தட்பவெப்பநிலை அனைத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்து, அதில் முழு திருப்தி ஏற்பட்டால்தான் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
மேலும், மத்திய அரபிக் கடல், கேரளாவின் இதரப் பகுதிகள், கர்நாடகாவின் கடற்கரை மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கி நாடு முழுவதும் ஜூலை இரண்டாம் வாரத்தில் தீவிரம் பிடிக்கும்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை காலத்தில் சராசரி அளவில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.