விதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2,000 மாற்றுவதில் சிக்கல் : வங்கிகள் குழப்பம்



 ரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்யாததால், கிழிந்த, சேதம் அடைந்த ரூ200, ரூ2,000 நோட்டு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வங்கிகள் குழப்பம் அடைந்துள்ளன. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் வகையில் பழைய ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவற்றை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இதற்கு மாற்றாக புதிய ரூ500, ரூ2,000 நோட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய நோட்டை டெபாசிட் செய்த மக்களுக்கு புதிய ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டை வங்கிகள் வழங்கின. பின்னர் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ200 நோட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

6.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூ2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன. போதுமான அளவு உள்ளதால் இவை அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக, பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் கார்க் கடந்த மாதம் 17ம் தேதி தெரிவித்தார். தற்போது வங்கிகளில் கிழிந்த மற்றும் சேதம் அடைந்த ரூ2,000 மற்றும் ரூ200 நோட்டை வாடிக்கையாளர்கள் மாற்ற கொண்டு வந்துள்ளனர். கிழிந்த, சேதம் அடைந்த, உருத்தெரியாமல் அழுக்கான ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நோட்டை மாற்றித்தரும் வங்கிகள் அவற்றை ரிசர்வ் வங்கியில் ஒப்படைத்து புதிய நோட்டு பெற்றுக்கொள்ளும். ஆனால், ரூபாய் நோட்டு மாற்றுவது தொடர்பான ரிசர்வ் வங்கி சட்டம் 2009ல் விதி பிரிவு 28ல் ரூ200, ரூ2,000 நோட்டு சேர்த்து திருத்தம் செய்யப்படவில்லை.

இதனால் தற்போதைக்கு இந்த நோட்டை மாற்ற இயலாது. விதி மாற்றம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டே நிதியமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது. ஆனால், நிதியமைச்சகம் இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றும் விதியில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டால் மற்றுமே ரூ200, ரூ2,000 நோட்டில் மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்களிடம் இவற்றை வாங்குவதா வேண்டாமா என சில வங்கிகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. இதனால் மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு விதி மாற்றம் செய்வதில் அக்கறை காட்டாமல் இழுத்தடிப்பது ஏன் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ரூபாய் நோட்டு மாற்ற விதியில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்.