வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வுகளுக்கு 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 8.60 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்று, 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். வரும், 21ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.



இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அறிமுகமாகி, 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, ஆறு பாடங்களுக்கு, தலா, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.தற்போது, நுழைவு தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வுஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண் வழங்கப் படும் முறை, 100 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது. 

இந்த நடைமுறை, நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமாகி உள்ளது.இதன்படி, பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த, 600 மதிப்பெண் முறை, வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2க்கும் அறிமுகம் ஆகிறது. எனவே, இந்த ஆண்டுடன், 1,200 மதிப்பெண் முறை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், பிளஸ் 2க்கு மட்டும், தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு ஒரு சான்றிதழ், பிளஸ் 2க்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இறுதியாக, இரண்டு வகுப்புகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.