அண்ணா பல்கலைக்கு தேசிய விருதுகள்

சென்னை:தேசிய கல்வி நிறுவனங்களின், தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, ஒட்டுமொத்தப் பிரிவில், பத்தாவது இடம் பிடித்தது. அதற்கான விருதுகளை, முதல்வர்
பழனிசாமியிடம் அளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வாழ்த்து பெற்றார்.
இந்த ஆண்டுக்கான, தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, அகில இந்திய அளவில், 10வது இடம் பிடித்தது.
நான்காம் இடம்
இது தவிர, தமிழகத்தில் உள்ள, 19 கல்வி நிறுவனங்கள், பட்டியலில் முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளன.பல்கலைகளுக்கான பிரிவில், அண்ணாப் பல்கலை, நான்காமிடம் பெற்றுள்ளது. இது தவிர, தமிழகத்தில் உள்ள, 21 பல்கலைகள், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளன. பொறியியல் பிரிவில், அண்ணா பல்கலை, எட்டாமிடம் பெற்றுள்ளது. இது தவிர, 18 கல்வி நிறுவனங்கள், 100 இடங்களுக்குள் வந்துஉள்ளன.
கல்லுாரிகளுக்கான பிரிவில், தமிழகத்தில் உள்ள, ஐந்து அரசு கல்லுாரிகள், 33 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரி கள், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளன.
வாழ்த்து
இதற்கான விருதுகளை, டில்லியில், ஏப்., 3ல் நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வழங்கினார்.அவற்றை, அமைச்சர் அன்பழகன், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியிடம் அளித்து, வாழ்த்து பெற்றார். அப்போது, உயர் கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர், விவேகானந்தன் உடன்இருந்தனர்.