‘நீட்’ தேர்வு: ‘தமிழக மாணவர்களுக்கு இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன், ஒரு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. வேறு மாநிலத்துக்கு தேர்வு எழுதச் செல்லும்போது, தமிழ் வழி கேள்வித்தாள்கள் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும். எனவே, தமிழக மாணவர்களுக்கு, இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கில் சி.பி.எஸ்.இ. இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இடம் இல்லாததால், அண்டை மாநிலங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு தொடர்பான எந்த ஒரு வழக்கையும் ஐகோர்ட்டு விசாரிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது, வழக்குதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன் ஆஜராகி வாதாடினார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

‘நீட்’ தேர்வு தொடர்பாகத்தான் ஐகோர்ட்டு விசாரிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு மையங்கள் குறித்து விசாரிக்கக்கூடாது என்று கூறவில்லை. எனவே, இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது.

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது