தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு | தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி
கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நடக்கிறது. ஆனால், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். இடங்களை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் விருப்பப்படி நிரப்பிக்கொள்ளலாம். இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு (2018-19) முதல் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், செயலாளர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த 2018-19 கல்வியாண்டு முதல் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கை பணிகளுக்காக கல்லூரி முதல்வர், 2 மூத்த பேராசிரியர்கள் கொண்ட மாணவர் சேர்க்கை குழுவை அமைக்க வேண்டும். பி.எட். விண்ணப்பம் வழங்குவது, தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் மெரிட் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த குழு செய்ய வேண்டும். பி.எட். மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி  (மதிப்பெண், இட ஒதுக்கீடு) மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு அதன் முழு விவரங்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.