அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு : தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1-1-2016 முன் தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த 1-10-2017 அன்று அரசு அறிவித்தது. 
ஆனாலும், 21 மாத நிலுவைத்தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள ஊதிய முரண்பாடுகளை களையாமல், மீண்டும் அதே குறைபாடுகளுடன் 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து தற்போது, அந்த ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊதிய முரண்பாடுகளை களைய எம்.ஏ.சித்திக் (ஐஏஎஸ்) அரசு செயலாளர் (செலவினம்), நிதித்துறை தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்துள்ளது. ஊதிய முரண்பாடு மற்றும் ஊதிய மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஒரு நபர் குழு திட்டமிட்டுள்ளது.  
மனுதாரர்கள் மற்றும் அரசு பணியாளர் சங்கங்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிக்கைகளை ஒரு நபர் குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரி omc_2018@tn.gov.in அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.