தமிழகம் முழுவதும் பள்ளி வேலை நாள் இன்றுடன் நிறைவு

தமிழகம் முழுவதும், இன்றுடன்(ஏப்.,20) பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய தேர்வுகளான, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டன. பத்தாம் வகுப்புக்கு, இன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இத்துடன், 10ம் வகுப்புக்கு, அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. 



தமிழகத்தில், தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில், தேர்வுகள் ஏற்கனவே, முடிந்துவிட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகள், இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனவே, இன்றுடன், மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன. 

நாளை முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. மே, 31 வரை விடுமுறை நீடிக்கும். மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதே நேரம், ஆசிரியர்களுக்கு, ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும். அவர்களுக்கு, 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.