தமிழக அரசு சார்பில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு சிறப்பு பயிற்சி

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 72 ஆயிரம் பேருக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பங்கேற்ற சிறந்த மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழகத்தில் 9 கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

அதன்படி சிறந்த மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சியுடன் உணவும், தங்கும் இடமும் வழங்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் 9 இடங்களில் இந்த சிறப்பு பயிற்சி தொடங்கியது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 350 மாணவ- மாணவிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு ‘நீட்’ தேர்வு பயிற்சி நேற்று தொடங்கியது.

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பயிற்சியை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப்புகளையும், பயிற்சி கையேடுகளையும் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்‘ என்றார்.