குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்கிறது அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடைபெற உள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான தேர்வு குரூப்-2ல் அடங்கிய நேர்முக தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களை கோரியிருந்தது.

இந்த பதவிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி நடந்தது. நேர்காணல் ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 19-ந் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் 1,094 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல் கட்ட கலந்தாய்வு மார்ச் 19-ந் தேதி முதல் 3-ந் தேதி வரையிலும் நடந்தது.

முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ள 88 காலிப்பணியிடங்களில் 45 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1:5 என்ற விகிதாச்சாரத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவு எண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் அழைப்பு கடிதம், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு குறிப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் வருகைதர தவறும் பட்சத்தில் அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு அடிப்படை சம்பள விகிதம் ரூ.9,300-ல் ஒரு பதவியை தேர்வு செய்திருந்து தற்போது இடம் பெற்றுள்ள பதவி காலியிடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்குகொள்ளலாம்.

தரவரிசை மற்றும் பதவிகளுக்கான கல்வித்தகுதி காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 1:5 விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளதால் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தேர்வு பெறும் வாய்ப்பு இல்லை என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.