10ம் வகுப்பு அறிவியல் சென்டம் எடுப்பதில் சிக்கல்

'பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுப்பது சிரமம்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புக்கு, நேற்று அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. இதில், 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பயந்த அளவுக்கு, வினாக்கள் கடினமாக இல்லை. பெரும்பாலான வினாக்கள், எளிதாகவே இருந்தன. 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் மட்டுமே, யோசிக்க வைத்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.


தேர்வு குறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலரும், நல்லமனார் கோட்டை, அரசு பள்ளி அறிவியல் ஆசிரியருமான, பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: மற்ற பாடங்களை போல, அறிவியல் தேர்வு கடினமாக இல்லை. செய்முறை தேர்வில், 25 மதிப்பெண் தவிர, 75 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வில், பெரும்பாலான மாணவர்கள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். ஐந்து மதிப்பெண்களில், இரண்டு; ஒரு மதிப்பெண்ணில் ஒரு கேள்வியும், இதுவரை இடம் பெறாத, புதிய கேள்விகள். மிக நன்றாக படித்த மாணவர்கள் மட்டுமே, இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்; 11 மதிப்பெண்களை பெற முடியும். இயற்பியல் பகுதியில், பெரும்பாலும் புதிய வினாக்களே இடம்பெற்றன. இந்த வினாத்தாளால், தேர்ச்சி சதவீதம் குறையாது. ஆனால், குறைந்த மாணவர்களே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்ணான, 'சென்டம்' பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.