பிளஸ் 1 தேர்வில், 40 சதவீதம், 'ஜஸ்ட் பாஸ்' : விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அதிர்ச்சி

கடின வினாத்தாள் காரணமாக, பிளஸ் 1 பொது தேர்வில், 40 சதவீத மாணவர்கள், 'ஜஸ்ட் பாஸ்' என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வில், பெரும்பாலான வினாக்கள், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளின் வினாக்களை போல், நுண்ணறிவை ஆய்வு செய்யும் வகையில் இடம் பெற்றன. 


அதனால், பெரும்பாலான மாணவர்கள் விடை எழுத திணறினர்.இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுக்கான, மொழிப்பாடத்துக்கு, ஒரு வாரத்திற்கு முன்பும், முக்கிய பாடங்களுக்கு, நேற்று முன்தினமும், விடைத்தாள் திருத்தம் துவங்கியது.இந்த விடைத்தாள் திருத்தத்தில், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகிஉள்ளன.விடைத்தாள் திருத்தத்திற்கான, விடைக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.ஒவ்வொரு கேள்வியிலும், சில குறிப்பிட்ட விடை அம்சம் இருந்தால் மட்டுமே, மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அதனால், 'சென்டம்' என்ற, 100க்கு, 100 முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர் எண்ணிக்கை, பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.'தமிழ் வழி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, தேர்ச்சி மதிப்பெண் குறைகிறது; 40 சதவீதம் பேர், 'ஜஸ்ட் பாஸ்' மதிப்பெண் மட்டுமே பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் மட்டுமே, 70 சதவீதம் வரை மதிப்பெண் பெறுவர்' என, விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள், அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், 'இந்த ஆண்டு, பிளஸ் 1 வினாத்தாள் முறையை மாற்றியதால், வெறும் மனப்பாட கல்வி முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.'நுண்ணறிவுடன், பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் மட்டுமே, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அரசு எதிர்பார்க்கும் தேர்ச்சி சதவீதம் குறையாது' என்றனர்.