மீண்டும் புயல் உருவாகும் அபாயம்: குமரி கடலில் மாற்றம்

சென்னை:'இந்திய பெருங்கடல் பகுதியில், ஒக்கியை போன்ற, புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள், இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை:
இந்திய பெருங்கடலில், இலங்கையின் தென்பகுதியை ஒட்டி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, நாளை காலை, வடமேற்கு திசையில் நகரும். பின், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடலில் வலுவடைந்து, அடுத்த, 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.
அதனால், குமரி கடலோர பகுதிகளில், மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில், 60 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளாவின் கடற்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில், மீனவர்கள் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு, கடலுக்குள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது நிலவுவது போன்ற கடல் சூழல், 2017 நவ., 29ல் காணப்பட்டது. பின், திடீரென, 'ஒக்கி' புயலாக மாறி, யாரும் எதிர்பாராத வகையில், நவ., 30ல், கன்னியாகுமரியை கடுமையாக தாக்கியது. அதனால், கடற்படை, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வாயிலாகவும், வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை செய்துஉள்ளனர்.