வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு

'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேலும், இணைய தளம் வழியாக தாக்கல் செய்ய முடியாதவர் களுக்கு, வருமான வரிக் கணக்கை தயார் செய்து கொடுக்க, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான சிறப்பு கவுன்டர்கள், 22ம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகின்றன.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கை, வரும், 31க்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக, அரசு விடுமுறை தினங்களிலும், வருமான வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆண்டு முதல், நடப்பு நிதியாண்டு வருமான வரி கணக்கை, அடுத்த ஆண்டுக்குள் செலுத்தும் நடைமுறையை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.



அதாவது, 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரியை, 2018 ஜூலை, 31க்குள் செலுத்த வேண்டும்; அதற்குப் பின், 2019 மார்ச், 31க்குள் செலுத்துபவர் களுக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சட்டத் திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், வரும், 31க்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறுபவர்கள், இனி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவே முடியாது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.



வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர் களுக்கு, வருமான வரிஅலுவலகம், தொடர்ந்து, நினைவூட்டல் கடிதம் அனுப்பி வருகிறது.இந்த நிலையில், 31ம் தேதி கடைசி என்பதால், அதற்கு முன், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு, இந்த மாதம் மட்டும், 20 லட்சம் பேருக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்கு தாக்கல் கட்டாயம்

மாத ஊதியம் பெறுபவர்கள் சம்பளத்திலிருந்து, 10 சதவீத தொகை, டி.டி.எஸ்., என்ற வருமான வரிப் பிடித்தமாக, சம்பந்தப்பட்ட நிறுவனத் தால் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு, டி.டி.எஸ்., செலுத்துபவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என, கருது கின்றனர். ஆனால், வரும் ஆண்டில் இருந்து, டி.டி.எஸ்., செலுத்தும் நபர்களுக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.