உயர்கல்வி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை

சென்னை:'உயர்கல்வி நிர்வாகத்தில், மாற்றம் ஏற்படுத்த வேண்டும்' என, 'நெட், செட்' சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, 'நெட், செட்' பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர், பேராசிரியர் மதுசூதனன் கூறியதாவது:பல்கலைகளில், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும்
துணைவேந்தர்கள் மீது, கவர்னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நியமனங்களில், பேராசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவின் அறிக்கையை, அந்தந்த பல்கலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
பல்கலைகள் மற்றும் பேராசிரியர்கள் குறித்த புகார்களின் விபரங்களை யும், கவர்னர் அலுவலகம் வெளியிட வேண்டும்.பல்கலைகளின் நிதி நிலவரம் குறித்த, வெள்ளை அறிக்கை தேவை. பல்கலை துணைவேந்தர்களை, நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் தேர்வு செய்ய வேண்டும்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு மோசடியில், இதுவரை, தனியார் நிறுவனம் மற்றும் இடைத்தரகர்களை சுற்றியே விசாரணை நடக்கிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, விசாரிக்கப்பட வேண்டும்.அரசு கல்லுாரிகள், பல்கலைகளில், கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது, சுயநிதி கல்லுாரிகளில் ஆசிரியர்கள் நியமனம், உறுப்பு கல்லுாரி ஆசிரியர்கள், நுாலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகிய நியமனங்களில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்ற வேண்டும். உயர்கல்வியின் நிர்வாக முறைகளில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.