கல்வித்துறை ஊழியருக்கு சலுகை? தேர்வு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2 தேர்வில், கல்வித்துறை பணியாளர் குடும்பத்தினருக்கு, மறைமுக சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகாரை யடுத்து, அனைத்து தேர்வு மையங்களிலும், சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி அதிகாரியிடம் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மகன், கடலுார் மாவட்டத்தில், பிளஸ் ௨ தேர்வு எழுதுவதாகவும், அவருக்கு தேர்வு மையத்தில் சலுகை தரப்படுவதாகவும், தேர்வுத்துறைக்கு, மொட்டை கடிதம் வந்தது. 


இதையடுத்து, அதிகாரிகள், தேர்வு மையத்தில் ரகசிய சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவரின் விடைத்தாளை, தனியே சேகரித்து வைத்துள்ளனர்.மற்ற மாவட்டங்களிலும், தனியார் பள்ளி தேர்வு மையங்கள் மீது வந்த புகார்களிலும், சந்தேகத்திற்கிடமான விடைத்தாள்கள் தனியே, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, தேர்வுக்கு பின், தனியாக திருத்தி, உண்மையை கண்டறிய, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.'தேர்வில் எந்த முறைகேடுகளுக்கும் இடம் தரக்கூடாது. மீறினால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.