'நீட்' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு

தமிழகத்தில் 'நீட்' உட்பட போட்டி தேர்வுக்காக ஒன்பது மாவட்டங்களில் உறைவிடப் பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு 412 போட்டி தேர்வு மையங்களில் சனி, ஞாயிறு பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மதிப்பெண், நடப்பு கல்வியாண்டு செயல் திறன், கற்றல் திறன் அடிப்படையில், 2920 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒன்பது மாவட்டங்களில் ஒரு மாதம் உறைவிடப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 


மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் பெற்றோர் ஒப்புதல் கடிதமும் பெறப்படுகிறது.தமிழ் வழியில் திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மையங்களில் 2000 மாணவருக்கும், ஆங்கில வழியில் சென்னை, ஈரோடு, கோவில்பட்டி மையங்களில் 920 மாணவருக்கும் ஏப்., 5 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தனித்தனியாக தங்கும் வசதி உள்ளது.மதுரை முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து கூறுகையில், ''மதுரையில் இருந்து 289 மாணவர்கள் திண்டுக்கல், துாத்துக்குடி மையங்களுக்கு உறைவிடப் பயிற்சிக்கு செல்கின்றனர்,'' என்றார்.