சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறு தேர்வு தேதி அறிவிப்பு

சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 பொருளியல் பாட மறு தேர்வு, அடுத்த மாதம், 25ல் நடக்கும்; 10ம் வகுப்பு கணித தேர்வு தேதி குறித்த அறிவிப்பு, 15 நாட்களில் வெளியாகும்' என, மத்திய கல்வித்துறை செயலகம்அறிவித்து உள்ளது. 


சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய, 10ம் வகுப்பு கணிதம் மற்றும் பிளஸ்2 பொருளியல் தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே வெளியான விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, 'இரு பாடங்களுக்கும், விரைவில் மறு தேர்வு நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது.வினாத்தாள் வெளியானதற்கும், மறு தேர்வு அறிவிப்புக்கும் கடும் கண்டனம் தெரிவித்து, டில்லியில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.நேற்று, பார்லிமென்ட் சாலையில் கூடிய மாணவர்கள், காங்., இளைஞர் அணியினர், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்,பிரகாஷ் ஜாவடே கரின் வீட்டைமுற்றுகையிட முயன்றனர். எனினும் அவர்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


இந்த போராட்டத்தில், பா.ஜ., மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி.,யை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இதனால், டில்லியின் முக்கிய சாலைகள் ஸ்தம்பித்தன.இந்நிலையில், மறு தேர்வு தேதி குறித்த கல்வித்துறை செயலக அறிவிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2 பொருளியல் பாடத்திற்கான மறு தேர்வு, ஏப்., 25ல் நடக்கும். 10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள், ஹரியானா மற்றும் டில்லியில் மட்டுமே, 'லீக்' ஆகியுள்ளது.எனவே, அந்த இரு மாநிலங்களில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மட்டும், ஜூலை மாதம், மறு தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வு தேதி குறித்த அறிவிப்பு, 15 நாட்களில் வெளியாகும்.இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, டில்லி, பீஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக,6 மாணவர்கள், டுடோரியல் நிறுவனஅதிபர் ஒருவர் என, ஏழு பேரை, ஜார்க்கண்ட் போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து, அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. வினாத்தாள் எப்படி கிடைத்தது, அதை, 'வாட்ஸ் ஆப்'பில் முதலில் கசிய விட்டது யார்என்பது குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.