பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு இயக்கமான ஜாக்டோ - ஜியோ கிராப் முடிவு செய்துள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியருக்கான சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.


கூட்டு இயக்கத்திலுள்ள கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் பொதுத் தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக கல்வி இயக்குனர் இளங்கோவனுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 


ஆனால் சி.இ.ஓ.,க்கள் வேண்டுகோளை ஏற்றும், மாணவர் நலன் கருதியும் புறக்கணிப்பு திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், இவ்வமைப்பிலுள்ள அலுவலக பணியாளர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம் உட்பட 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் மீண்டும் போராட முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஏப்., 9 துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
அலுவலக பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகானந்தம், பொருளாளர் துரைப்பாண்டி கூறியதாவது: தேர்வு பணியில் கல்வித்துறை அலுவலர் தான் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., போல் உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். அதிகாரிகள் கோரிக்கையை கேட்காததால் புறக்கணிக்கும் போராட்டம் துவக்க உள்ளோம், என்றனர்.


பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "திருச்சியில் இதுதொடர்பான ஜாக்டோ - ஜியோ கிராப் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 
அதில் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படும். மேலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப்பயணம் செல்லவும் முடிவு எடுக்கப்படவுள்ளது," என்றார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks