பிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.


கே.காளீஸ்வரி, ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ம் மிக எளிமை, ஒன்றிரண்டு வினாக்கள் சிந்தித்து பதில் அளிப்பதாக இருந்தன. அது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் சரியான பதில் எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. 5 மதிப்பெண் கட்டாய வினாவும் எளிமை. சென்டம் வாய்ப்பு அதிகம்.


ஏ.சினேக பிரித்தா, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ல் சில கடினமாக இருந்தன. மற்றபடி மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் வினாக்கள் எல்லாம் எளிமை தான்.ஒருமதிப்பெண் வினாக்கள் எழுத முடியாத நிலையில், சென்டம் வாய்ப்பு குறையும். ஐந்து மதிப்பெண் கட்டாய வினா எட்டாவது பாடத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டு படித்தபடியே கேட்கப்பட்டிருந்தது.


எஸ்.நித்தீஷ்குமார், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டும் சற்று கடினமாக, கணக்கு போட்டு எழுதுவதாக கேட்கப்பட்டிருந்தன.மற்ற வினாக்கள் கடந்தாண்டுகளில் கேட்கப்பட்டது போல், திரும்ப திரும்ப பொதுத் தேர்வில் இடம்பெற்றதாகவே இருந்தன. இதனால், எளிமையாக இருந்தது.


எம்.சேக்அப்துல்லா, இயற்பியல் ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் கேள்விகளில், பி டைப்பில் வினா எண் 5, 9, 25 ஆகியவை சற்று கடினம். சிந்தித்து எழுத வேண்டியதாக இருந்தது. இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை விட எளிமை தான். ஒரு மார்க்கில் 15 வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 10 வினாக்கள் பயிற்சியின் மூலம் செய்வதாகவும், 5 வினாக்கள் சிந்தித்து எழுதுவதாகவும் இருந்தன.