பள்ளிக்குள் மாணவன் பூட்டப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை உட்பட 2 பேர் சஸ்பெண்ட்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிஎஸ் பாளையம் பகுதியில் உள்ள பள்ளியின் வகுப்பறையில் தவறுதலாக மாணவன் உள்ளே வைத்து பூட்டப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் இந்திரா, வகுப்பாசிரியை கலைவாணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வாதானூர் பழங்குடியின பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் வேல்முருகன். இவர் பிஎஸ் பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். புதன்கிழமை பிற்பகல் காது வலியால் அவதியடைந்த வேல்முருகன் வகுப்பு ஆசிரியரிடம் கூறிவிட்டு வகுப்பறையின் கடைசி இருக்கையில் படுத்துத் தூங்கினார்.
மாலை பள்ளி முடிந்து மாணவர்கள், ஆசிரியர்கள் சென்றுவிட்டனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் பள்ளியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். வகுப்பறையில் தூங்கிக்கொண்டிந்த மாணவர் வேல்முருகன் கண்விழித்து பார்த்தபோது பள்ளியில் யாரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டுக்கு செல்ல வகுப்பறையில் இருந்து வந்தபோது பள்ளியின் இரும்புக் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அச்சமடைந்தார். இதையடுத்து மாணவர் பயத்தில் கூச்சலிட்டார். மாணவரின் அழுகைக் குரலைக் கேட்ட பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்கள் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த திருபுவனை போலீஸார் இரும்புக் கதவின் பூட்டை உடைத்து மாணவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பாசிரியை இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.