பிளஸ்-2 வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து - DAILY THANTHI

கடந்த 1-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய முக்கிய தேர்வுகள் முடிந்து நேற்று வேதியியல் தேர்வு நடைபெற்றது.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் தேர்வு எளிதாக இருந்ததா? என்று கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது. தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்டது. ஒரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் 3 மதிப்பெண் கேள்விகளில் 46, 47, 50, 51 கேள்விகள் கடினமாக இருந்தன. 10 மதிப்பெண் கேள்விகளில் 70-வது வினா கட்டாயம். அந்த கேள்வி எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தாலும் 3 மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. கடினமாக கேட்கப்பட்ட கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் வந்தது இல்லை.

பெற்றோர் ஆசிரியர் கழக வினா புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. என்றாலும் வேதியியல் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. கணிதத்தேர்வும் கடினமாக இருந்தது. அதற்கு ஆறுதல் படுத்தும் வகையில் இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது. நேற்று நடைபெற்ற வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது.

இவ்வாறு மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளில் காப்பி அடித்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் 21 பேரும், திருச்சி மாவட்டத்தில் 6 பேரும், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், ஈரோடு, கரூர், அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பிடிபட்டனர். மொத்தம் 34 பேர் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.