10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் கடினம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வினாத்தாள் பதம் பார்த்தது போல், ஆங்கில வினாத்தாளும், பாஸ் ஆக முடியுமா என, பல மாணவர்களை அச்சத்தில்
ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வினாத்தாள் கடினமாக இருப்பதால், இன்றைய தேர்வும் கடினமாக இருக்குமோ என, மாணவர்கள் அச்சத்துடன், தேர்வுக்கு செல்லும் நிலை உள்ளது.


சில தினங்களுக்கு முன் நடந்த, தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் கடினமாக இருந்தது.நேற்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதற்கான வினாத்தாள், மிக கடினமாக இருந்தது.தமிழ் வழியிலும், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், சராசரி மாணவர்களும், 'பாஸ்' ஆக முடியுமா என, அச்சம் அடைந்துள்ளனர்.மொத்தம், 100 மதிப்பெண்களுக்கான வினாத்தாளில், இரண்டு மதிப்பெண் வினாக்களில் ஒரு பகுதி, சிக்கலான மற்றும் சிந்தித்து புரிந்து கொள்ளும் வார்த்தைகளாக இருந்தன. கவிதை பகுதியில், மனப்பாட பகுதி இல்லாத பிரிவில் இருந்து கேள்விகள் இடம் பெற்றதால், பதில் எழுத முடியாமல், மாணவர்கள் தவித்தனர். 

அதேபோல், பல கேள்விகள் எதிர்மறை கேள்விகளாகவும், பயிற்சி பெறாத, புதிய கேள்விகளாகவும் இருந்தன.இதில், நன்றாக பயிற்சி எடுத்து படிக்கும் மாணவர்கள் கூட, அதிகபட்சம், 80 மதிப்பெண்கள் எடுப்பதே கடினம் என கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக படிக்கும் மாணவர்கள், 50 மதிப்பெண்கள் எடுப்பதே சிரமம் என்றும், அதற்கும் கீழே உள்ள, கிராமப்புற அல்லது நகர்ப்புறத்தில் பின்தங்கிய நிலையில், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பாஸ் சதவீதமே குறையும் என்றும், கூறப்படுகிறது.

இது குறித்து, ஆங்கில ஆசிரியர்கள் கூறியதாவது:வினாத்தாளை தரமாக தயாரிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நம் கல்வி முறை மற்றும் பயிற்றுவிக்கும் முறைகளின் அடிப்படையில் மட்டுமே, மாணவர்களை சோதிக்க முடியும். பயிற்றுவிக்கப்படாத முறைகளில் கேள்விகள் இருந்தன.மேலும், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, தேர்வே இல்லாமல், 'ஆல் பாஸ்' ஆகும் மாணவர்களிடம், திடீரென நுணுக்கமான கேள்விகள் கேட்பதால், தடுமாறுகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.