புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!' - தமிழக பள்ளிக் கல்வித்துறை

புதிய பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக் கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக
பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. 


அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரான, அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நேரடி பார்வையில், புதிய பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதற்கான புத்தகங்கள் எழுதும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, முதல் பருவ புத்தகங்கள் மட்டும், அச்சிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர், பிரதீப் யாதவ் ஆகியோர், வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளனர்.'புதிய பாடத் திட்டத்தில், கலைத் திட்டத்தை மீறாமல், தமிழக அரசின் அரசாணைக்கு உட்பட்டு, பாடங்களை எழுத வேண்டும். எழுத்து மற்றும் பொருள் பிழைகள் ஏற்பட்டு விடக் கூடாது. வரலாறு, புவியியல் போன்ற பாடங்களில், ஆண்டு, எல்லை, குறிப்பிட்ட இனத்தவரின் வரலாறை சொல்லும் விதம் போன்றவற்றில், எந்தவித சர்ச்சையான, பாரபட்சமான கருத்துகள் இடம்பெறக் கூடாது' என, அறிவுறுத்தி உள்ளனர்.