நீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நீட் தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 17 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்த்தப்படும். அதாவது அவர்கள் 30 வயது வரை நீட் தேர்வை எழுதலாம்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 என நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து சில மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பை 25 என நிர்ணயித்து சி.பி.எஸ்.இ. எடுத்த முடிவில் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.