வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யலாம்: ஜூன் மாதம் வருகிறது புதிய செயலி

புது தில்லி: வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

டிஜிட்டல் மயத்தை நோக்கி முன்னேறும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இணையதளம் மூலம் செயல்படும் வகையில் இந்த செயலியை உருவாக்கவும், இதன் மூலம் ஒரு வாக்காளர் மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றால் கூட தேர்தல் அலுவலகம் அல்லது வாக்கு மையத்துக்குச் செல்லாமலேயே தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எலக்டோரல் ரோல்ஸ் சர்வீசஸ் நெட்' (ERONET - Electoral Rolls Services NeT) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த செயலி மூலமாக எந்த நேரத்திலும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம். இதுவரை 22 மாநிலங்கள் இந்த செயலியில் இணைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் அல்லது நடைபெற்று முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் இதுவரை இணைக்கப்படவில்லை.
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செயலியின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய, வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதைப் பயன்படுத்தி திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

புதிய முகவரியை பதிவு செய்ததும், தானாகவே பழைய முகவரி அழிக்கப்பட்டு, புதிய முகவரி பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.