'நீட்' தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு : 'தினமலர்' சார்பில் நாளை நடக்கிறது

சென்னை: 'தினமலர்' சார்பில், 'நீட்' குறித்த வழிகாட்டி கருத்தரங்கு, நாளை, தி.நகரில் உள்ள, சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது.கடந்த வாரம், 'தினமலர்' சார்பில் நடத்தப்பட்ட, 'நீட்' மாதிரி தேர்வைத் தொடர்ந்து நடைபெறும் இக்கருத்தரங்கில், மாதிரி தேர்வில் மாணவர்கள் செய்த பொதுவான பிழைகளும், அதை சரிசெய்யும் முறை பற்றியும், விரிவாக விளக்கப்படுகிறது.

விளக்கம் : 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளை தேர்வு செய்யும் விதம் உட்பட, அப்ளிகேஷன் முதல், அட்மிஷன் வரையிலான அனைத்து தகவல்களும் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பிடித்த மாணவர்கள், அவர்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வும் உண்டு. மாணவர்கள் மற்றும் பெற்றோரது அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில், பிரத்யேக கேள்வி - பதில் நிகழ்வும் இடம் பெறுகிறது. காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில், 'நீட்' தேர்வை அணுகுவதால் கிடைக்கும், 'ஸ்காலர்ஷிப்' வாய்ப்புகள் குறித்த தகவல்களும் வழங்கப்பட உள்ளன. 'தினமலர்' உடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்துகிறது. 'நாலெட்ஜ் பார்ட்னர்' ஆக, ஆகாஷ் பயிற்சி நிறுவனம் இடம் பெற்றுள்ளது.
இலவசம் : மருத்துவப் படிப்புகள் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து, எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியர், சத்தியஜித், விளக்கம் அளிக்கிறார்.'நீட்' தேர்விற்கு தயாராவது எப்படி என்பது குறித்து, ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர், உலகநாதன் மற்றும், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் குறித்து, கல்வி ஆலோசகர், கோவிந்தராஜ் ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.கருத்தரங்கில், 10, பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்கலாம். நிகழ்வில், 10 மற்றும் பிளஸ் ௧ மாணவர்கள், ஏன் இப்போதே, 'நீட்' தேர்விற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' மாதிரி கேள்வித்தாள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கில் பங்கேற்க, கட்டணம் ஏதுமில்லை.