டி.ஆர்.பி., தலைவர் பதவி மீண்டும் காலி : பணி நியமன தேர்வுகள் முறையாக நடக்குமா?

டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவி மீண்டும் காலியாகியுள்ளது. அதனால், பணி நியமன தேர்வுகள் முறைப்படி நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது.

முறைகேடு : இந்தத் தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, 200 பேருக்கு, முறைகேடாக இரு மடங்கு மதிப்பெண் வழங்கப்பட்டது அம்பலமானது. அதனால், 1.33 லட்சம் பேர் பங்கேற்ற, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அத்துடன், முறைகேடு தொடர்பாக, சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். அவர்களில் ஐந்து பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், டி.ஆர்.பி., தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சீனிவாசன், கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். முறைகேடு வழக்கு விசாரணை, முக்கிய கட்டத்தில் உள்ள நிலையில், இவர் திடீரென, தமிழக சிப்காட் நிறுவன மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். டி.ஆர்.பி., தலைவர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என, அரசு அறிவித்துள்ளது. அதனால், தேர்வர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நீர் ஆதார மேலாண்மை திட்ட இயக்குனரான, விபு நய்யார், 2013ல், டி.ஆர்.பி., தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். அவர், 2016ல் மாற்றப்பட்டதும், டி.ஆர்.பி.,யின் உறுப்பினர் செயலராக இருந்த, வசுந்தராதேவியும், தற்போதைய உறுப்பினர் செயலரான உமாவும், நிர்வாகத்தை கவனித்தனர். பள்ளிக் கல்வி செயலராக, உதயசந்திரன் பொறுப்பேற்றதும், டி.ஆர்.பி., தலைவராக, காகர்லா உஷா நியமிக்கப்பட்டார். ஆனாலும், பல்வேறு அரசியல் மற்றும் அதிகார தலையீடு களால், அவர் வேறு பதவிக்கு மாறினார்.
பதவி பறிப்பு : பின், தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகந்நாதன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பை, கூடுதலாக கவனித்தார். அவரது பணிக்காலத்தில் தான், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடந்தது. தேர்வில் நடந்த முறைகேடுகளையும், ஜெகந்நாதன் தான் கண்டுபிடித்து, போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இருப்பினும், அவரிடமிருந்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதன்பின் தான், டி.ஆர்.பி., தலைவராக, சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அவரும், பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், வேறு பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.தற்போது, சீனிவாசன், கூடுதல் பொறுப்பாக, டி.ஆர்.பி.,யை கவனிப்பார் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், டி.ஆர்.பி., தலைவர்களை அடிக்கடி மாற்றுவது, விசாரணையை கடுமையாக பாதிக்கும்.நிலையான அதிகாரிகள் இல்லாததால், எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்வுகள் மற்றும் நியமனங்கள், முறைப்படி நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.