அழகப்பா பல்கலைக்கு கவுரவம் : யு.ஜி.சி., முதல் தர வரிசையில் இடம்

பல்கலை மானியக்குழு எனும், யு.ஜி.சி., தர வரிசை பட்டியலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை முதலிடம் பெற்றுள்ளது.
பட்டியல் : மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அறிவுறுத்தலின்படி, மொத்தம் உள்ள, 819 பல்கலைகளை, கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம், செயல்பாட்டு திறன் அடிப்படையில் மூன்று வகையாக, யு.ஜி.சி., தரப்படுத்தியுள்ளது. இந்த பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தர வகையில், 32 பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலையும் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து, துணைவேந்தர், சுப்பையா கூறியது: தேசிய தர மதிப்பீட்டு குழுமத்தின் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பீட்டு புள்ளி அடிப்படையில் பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 3.5-க்கு மேல் எடுத்த பல்கலைகள் முதல் தர வகைக்கு தகுதி பெற்றுள்ளன. அழகப்பா பல்கலை 3.64 புள்ளி எடுத்துள்ளது.இந்த அங்கீகாரம் மூலம் புதிய துறை, மையங்கள், பாடப்பிரிவுகளை பல்கலை தானாகவே தொடங்க முடியும். புதிய ஆராய்ச்சி பூங்காக்கள், இன்குபேஷன் மையங்கள், தனியாருடன் இணைந்து புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு, யு.ஜி.சி.,யின் அனுமதி தேவையில்லை.


20 சதவீதம் : பன்னாட்டு அறிஞர்கள், பேராசிரியர்களை பணி அமர்த்தி கொள்ளலாம். வெளிநாட்டு மாணவர்கள், 20 சதவீதம் வரை சேர்த்து கொள்ளலாம். பல்கலை வளாகம் தவிர, புற வளாக மையங்களை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திறமையான ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். உலகத்தரம் வாய்ந்த, 500 வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.