பள்ளியில் கண்டிக்கப்படாத மாணவர்களால் நல்ல சமுதாயம் சாத்தியமில்லை

மதுரை: நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு. சுடர்விடும் பல சமுதாய சிற்பிகளை உருவாக்கும் புனித பணியில் உள்ள அவர்களால், சமீப காலமாக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, மாணவரை நல்வழிப்படுத்த முற்சிக்கும் போது ஏற்படும் எதிர் வினைகளால் மனம் நொந்து,ஆசிரியர் பணியில் ஏன் இருக்க வேண்டும்,' என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


இதற்கு சிறந்த உதாரணம், வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஆபாச படம் பார்த்த மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த நினைத்த தலைமையாசிரியருக்கு கிடைத்த பரிசு, கத்திக்குத்து. எந்த மாணவரை திருத்த நினைத்தாரோ அந்த மாணவரே அவரை குத்தியுள்ளார்.இச்சம்பவத்திற்கு பின் தவறான வழியில் செல்லும் மாணவரை தண்டிக்க எந்த ஆசிரியர்களாவது நினைத்து பார்ப்பார்களா என ஆசிரியர் சமுதாயம் கொதித்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில், கண்டிப்பு காட்டி, பிரம்பெடுத்த காலத்தில் மாணவர்கள் பணிவுடன் படித்து பிரகாசித்தனர். ஆனால் இன்று குறைந்தபட்சம் சொற்களால் கூட தண்டிக்க ஆசிரியர்களால் முடியவில்லை.அந்த அளவிற்கு மாணவர் - ஆசிரியர் உறவில் இந்த இடைவெளி ஏற்பட யார் காரணம்... கண்முன் தவறான வழியில் பயணிக்கும் மாணவர்களை திருத்துவதற்கு வழி என்ன... 


இது குறித்து ஆசிரியர், பெற்றோர் கூறுவது என்ன...


சீரழிக்கும் சினிமா : சந்திரன், மதுரை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்: மாணவருக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் முதலிடம் வகுப்பறை தான்.தாங்கள் பெற்ற பிள்ளையை போல் மாணவர்களையும் ஆசிரியர் நினைக்கின்றனர். அவர்கள் கெட்ட வழியில் போய் விடக்கூடாது என்பதால் தான் தண்டிக்க நினைக்கின்றனர். இன்றைக்கு சமுதாயம் சீர்கெட்டு போய் கொண்டுள்ளது. கை நுனியில் உள்ள அலைபேசியில் முன்னேற தேவையான நல்ல விஷயங்களும் உள்ளன. கெட்டு குட்டிச்சுவராக போக பல கெட்ட விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன.சினிமாக்கள் வன்முறை களங்களாக காட்டப்படுகின்றன. அரிவாள், துப்பாக்கி எடுப்பவர்களை ஹீரோக்களாகவும், ஆசிரியர், டாக்டர்களை ஜோக்கர்களாகவும் காட்டுகின்றனர். ஒழுக்கம் சார்ந்த கல்வியும், தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் சுதந்திரத்துடன் பணிப் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு அவசியம்.


கண்டிக்காத பெற்றோர் : நடராஜன், மாநில துணை தலைவர், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம்: ஆசிரியர்களை மதிக்கும் எண்ணம் மாணவர்களிடம் குறைந்து வருகிறது. இதற்கு சமுதாயம் சார்ந்த பல விஷயங்களை கூறலாம். ஒன்பதாம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' என்பதால் மாணவர் பலர் பள்ளிக்கே வருவதில்லை. இதை யாரிடம் நாங்கள் கூறுவது. பெற்றோரிடம் கூறினால் தற்கொலை செய்துகொள்ளுவோம் என எங்களை மாணவர்கள் மிரட்டுகின்றனர். கண்டித்தால் ஆசிரியர்களை தாக்குகின்றனர். பெற்றோரும் கண்டிப்பதில்லை. அப்படியென்றால் மாணவரை எப்படி தான் கண்டித்து திருத்துவது?தேர்ச்சி குறைந்தால் அதிகாரிகளுக்கும் ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களுக்கு இணையாக நல்லொழுக்க கல்வி அளிப்பதிலும் அக்கறை காட்டும் வகையில் சமுதாய மாற்றம் ஏற்பட்டால் தான் மாணவர் சமுதாயம் நல்ல நிலைக்கு வரும். எதிர்காலம் சிறக்கும்.


ஆசிரியர்களுக்கு முழு உரிமை : கிறிஸ்டோபர் ஜெயசீலன், தலைமையாசிரியர், மதுரை: மாணவர்களை கண்டிப்பதற்கும், அரவணைக்கவும் ஆசிரியர்களுக்கு முழு உரிமை அளிக்க வேண்டும். தண்டித்தார் என்பதற்காக ஒரு மாணவர் கத்தியால் குத்தும் மனநிலைக்கு ஆளாகிறான் என்றால் எங்கே போகிறது கல்வி முறை என்று தான் வேதனைப்பட வேண்டும். டீன் ஏஜ் மாணவர்களை ஆசிரியர்கள் மிக கவனமாக கையாள வேண்டும். அவர்களுக்கு அனுபவ அறிவை புகட்ட வேண்டும். மேல்நிலைக் கல்வியில் மாணவர், மாணவிகளுக்கு என தனித்தனி உடற்கல்வி இயக்குனர்கள் நியமிக்க வேண்டும். உளவியல் ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர் பணிச்சுமையை குறைத்தால் தான் மாணவர் நலனில் அவர்கள் முழு கவனம் செலுத்த முடியும். அவ்வப்போது ஆசிரியர்களை மாணவர்கள் போற்றும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியரால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறை சொல்லி விட முடியாது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவர்கள் சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்காது. பெற்றோர் இதை உணர வேண்டும்.


ஆசிரியரை குறை கூறாதீர் : ராஜேஸ்வரி, பெற்றோர், மதுரை: ஆசிரியர்களை நம்பி தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஒரு சில ஆசிரியர்களை வைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறையாக சொல்லி விட முடியாது.சிறந்த ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதே நேரம் பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கக் கூடாது. ஆசிரியர் தண்டித்தால் பிள்ளையின் எதிர்காலத்திற்கு தான் என நினைக்க வேண்டும். ஏன் தண்டித்தீர்கள் என அவர்களை அழைத்துக்கொண்டு ஆசிரியர்களிடம் சென்று நியாயம் கேட்கக் கூடாது. அப்படி செய்தால் ஆசிரியர்கள் மீது பிள்ளைகளுக்கு பயம் வராது. நல்ல சமுதாயம் உருவாக ஆசிரியர்கள் மீது பெற்றோர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை ஆசிரியர்களும் கெடுத்து விடக்கூடாது.


பெற்றோர், ஆசிரியர்நட்பு அவசியம் : தீப், மனநல மருத்துவர், மதுரை: சினிமா, 'டிவி'., நிகழ்ச்சிகள் மற்றும் மேற்கத்திய கலாசாரம் சில மாணவரை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இதை நன்கு உணர்ந்து பெற்றோர், வீட்டிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அப்போது தான் பள்ளியில் ஆசிரியர் கண்டித்தால், தனது நன்மை, வளர்ச்சிக்காகவே கண்டிக்கிறேன் என்பதை புரிந்து, படிப்பில் அக்கறை செலுத்துவர். மாணவரின் குணத்தை நல்வழிப்படுத்தும் அற்புத பணியில் ஆசிரியர்கள் உள்ளனர். இதை அவர்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். பள்ளியில் நடக்கும் கூட்டங்களில் பெற்றோர் பங்கேற்று மாணவர் செயலை கண்காணித்து, ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். முன்பெல்லாம் ஆசிரியர்கள், தம் வகுப்பில் படிக்கும் மாணவரின் குடும்பத்தோடு பழகி, அவர்களின் ஒழுக்த்தை கண்காணித்து, நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவினர். இன்று அந்நிலை இல்லை. பெற்றோரும் பணம், அந்தஸ்துக்காக இயந்திரம்போல் செயல்படுவதை தவிர்த்து, தம் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியர்களும், மாணவரின் மனநிலையறிந்து கவனத்துடன் அவர்களை கையாண்டால் மட்டுமே, ஆசிரியர், மாணவர் இடையேயான மோதல் போக்கு தவிர்க்கப்படும்.