கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு
ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது