வருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு

வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



2018-2019-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆன்லைன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் என அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே தொடங்கப்படும்.

சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையமும், பெரிய மாவட்டமாக இருந்தால் 2 உதவி மையங்களும் தொடங்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் உதவி மையங்கள் அமைக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் தனியார் கல்லூரிகளில் உதவி மையங்கள் தொடங்கப்படாது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஆன்லைன் கலந்தாய்வுக்கான தேதி விவரங்கள் அறிவிக்கப்படும். உதவி மையங்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிட்ட பின்னர் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.