பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில் வரும்மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்வு மையங்கள் அமைப்பது, முறைகேடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 32 மாவட்ட முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: மாணவர்கள் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இப்போது 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொத்தம் 27.29 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
நீதிபோதனை புத்தகம்:
பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் வருத்தமளிக்கிறது. மன அழுத்தம் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிதல், மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நீதிபோதனைகள்குறித்த புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். ஒழுக்கத்துடன் நல்ல பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம்.
48 மணி நேரத்துக்குள்...
தமிழக மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். விபத்தில் உயிரிழக்கும் மாணவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன், பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.