4 ஆண்டுக்கு பின் கலெக்டர்கள் மாநாடு

தமிழகத்தில், நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின், அடுத்த மாதம், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும்.

சட்டம் - ஒழுங்கு : மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில், முதல் நாள் கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம்; இரண்டாம் நாள், கலெக்டர்களுக்கான கூட்டம்; மூன்றாம் நாள், காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும்.இம்மாநாட்டில், கலெக்டர்கள் தங்கள், மாவட்டத்தின் தேவைகளை பட்டியலிடுவர். மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த, விபரங்களை எடுத்துரைப்பர். காவல் துறை அதிகாரிகள், மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எவ்வாறு உள்ளது; அமைதி நிலவ என்ன தேவை என்பதை கூறுவர். தலைமை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள், அவற்றை குறிப்பெடுப்பர். மாநாடு நிறைவு நாளில், முதல்வர், பிரத்யேக திட்டங்களை அறிவிப்பார். சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, கேடயம் வழங்கி பாராட்டுவார். இம்மாநாடு, அனைத்து மாவட்டங்களின் நிலவரத்தை, ஆட்சியாளர்கள் அறிய பெரிதும் உதவியாக இருக்கும். 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 2013 வரை, முறையாக கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடந்தது.
எதிர்பார்ப்பு : கடந்த, 2014ல், ஜெ., முதல்வர் பதவியை இழக்க நேரிட்டதால், பன்னீர்செல்வம் முதல்வரானார். அந்த ஆண்டு கலெக்டர்கள் மாநாடு நடத்தப்படவில்லை.அதன்பின், முதல்வரான ஜெ.,வும், மாநாட்டை நடத்தவில்லை. 2016 தேர்தலில், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது. ஜெ., மரணம் காரணமாக, பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதாலும், மாநாடு நடைபெறவில்லை. தற்போது, முதல்வராக உள்ள பழனிசாமி, மார்ச், 5ல், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.மார்ச், 5ல், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டம்; மார்ச், 6ல், கலெக்டர்கள் கூட்டம்; மார்ச், 7ல், காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறும் என, அரசு அறிவித்துள்ளது.இம்மாநாடு முடிந்த பின், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.