குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் 17½ லட்சம் பேர் எழுதினர்

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பதவி (494), இளநிலை உதவியாளர் (4,096), இளநிலை உதவியாளர் பிணையம் (205), வரித்தண்டலர் (48), நில அளவையர் (74), வரைவாளர் (156), தட்டச்சர் (3,463), சுருக்கெழுத்து தட்டச்சர்(815) என 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கு முதல் முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு பிப்ரவரி 11-ந் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.


டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் அதிகபட்சமாக இந்த தேர்வை எழுத 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் நேற்று இந்த தேர்வு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 962 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 508 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தீவிர கண்காணிப்புகளுக்கு இடையே காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் நடந்தது.

17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் (84.71 சதவீதம்) தேர்வு எழுதினர். 3 லட்சத்து 16 ஆயிரத்து 392 பேர் (15.29 சதவீதம்) தேர்வு எழுதவில்லை.

சென்னையில் தேர்வு எழுதுவதற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 894 பேர் (78 சதவீதம்) தேர்வு எழுதினர். 35 ஆயிரத்து 226 பேர் (22 சதவீதம்) எழுதவில்லை.

தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மையங்களுக் குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு கண்காணிப்பு பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். முறைகேடுகளை தடுப்பதற் காக தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் ‘வீடியோ’ மூலம் பதிவு செய்யப்பட்டன. 170 தேர்வு மையங்கள் ‘வெப் கேமிரா’ மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டன. 685 பறக்கும் படை கண்காணிப்புக்குழுவினர் தேர்வு மையங் களை சுற்றி வந்தனர். தேர்வு மைய நுழைவுவாயில்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மின்னணு கருவிகள் எடுத்து செல்வதற்கும், கைக்கெடிகாரம், மோதிரம் அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

டி.என்.பி.எஸ்.சி. கடந்த காலங்களில் நடத்திய தேர்வுகளில் சில தேர்வர்கள் விடைத்தாள்களில் தவறாக பதிவு எண்ணை எழுதியதால் அவர் களுக்கு மதிப்பெண் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் இந்த முறை தேர்வர்கள் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம், தேர்வு மையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் அச்சடிக்கப்பட்ட விடைத்தாள் வழங்கப்பட்டது. மேலும் விடைத்தாளில் பதில் அளிக் காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதனை குறிப்பிடும் முறையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக தேர்வு நேரம் முடிந்த பின்னர் தேர்வர்களுக்கு 5 நிமிடம் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறையால் குரூப்-4 தேர்வு முடிவுகள் கால தாமதமின்றி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய முயற்சிக்கு தேர்வு எழுதியவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

குரூப்-4 எப்படி இருந்தது? என்பது குறித்து தேர்வு எழுதியவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் 77 பக்கங்களை கொண்டதாக இருந்தது. 200 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இதில் பொதுத்தமிழ் கேள்விகள் எளிமையாக இருந்தன. பொது அறிவு கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன.

குரூப்-4 தேர்வுக்காக பயிற்சி மையங்கள் சென்றிருந்தவர்களுக்கு தேர்வு நிச்சயம் மிக எளிதாக இருந்திருக்கும். முதல் முறையாக தேர்வு எழுதியவர்களுக்கு சற்று சிரமமாக இருந்து இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

9 ஆயிரத்து 351 காலி பணி இடங்களுக்கு 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதி உள்ளதால், ஒரு பணி இடத்துக்கு 187 பேர் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.